இல்லம் > Uncategorized > சாருவோடு ஒரு நேர்காணல்

சாருவோடு ஒரு நேர்காணல்

தீராநதி – நேர்காணல்
 

வாழ்ந்து வாழ்ந்து அலுத்துவிட்டது. அதனால் அவன் வேறு ஒன்றைத் தேடுகிறான். இங்கே ஒரு இளைஞனும் அவனுடைய காதலியும் செக்ஸ் வைத்துக் கொள்ளவேண்டும் என்று நினைத்தால் கல்யாணம்தான் செய்துகொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் போலீஸ் பிடித்துவிடும். ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் கூட போய் தங்க முடியாது. உடனே ரெய்டு செய்து விபச்சார வழக்கில் உள்ளே தள்ளி விடுவார்கள்.

திருமணச் சான்றிதழ் வைத்திருக்கிறீர்களா என்று கேட்பார்கள். இதை பிராக்டிக்கலா நானே பல இடங்களில் பார்த்திருக்கிறேன். இந்த மாதிரியான இறுக்கமான ஒரு சமூகத்திற்குள் நாம் ஆசைப்படுவது எதுவும் கிடைப்பதில்லை. தடைசெய்யப்படுகிறது. கட்டுப்படுத்தப்படுகிறது. ஆக , இச்சமூகம் என்னை ஸ்திரீலோலனாகத்தான் இருக்க வைக்கிறது. அப்புறம் , நாம் எப்போதுமே வாழ்க்கையின் சௌகர்யமான இலக்கியத்தை மட்டுமே பேசிக்கொண்டு , சௌகர்யமான இலக்கியத்தை மட்டுமே படைத்துக் கொண்டி Ê ருக்கிறோம். நான் , பிரேதக் கிடங்கில் இருக்கக்கூடிய ஒருவன் எப்படி வாழ்ந்து கொண்டு இருக்கிறான் அவனுடைய வாழ்க்கை என்ன என்று ஆராய்ச்சி பண்ண நினைக்கிறேன். அதை வைத்து ஒரு கதை எழுதினால் உடனே இவன் பிரேதத்தைப் புணருகிறவன் என்றும் ; இவனுக்கு நெக்ரோஃபீலியா என்றும் பேசுகிறார்கள். அதற்கு நான் என்ன செய்யமுடியும் ?

தீராநதி: வழக்கமான வாழ்க்கையிலிருந்து மாறுபட்டு நீங்கள் வாழ்வின் வேறு பக்கங்களைப் பற்றி அதிகம் எழுதுகிறீர்கள். நீங்கள் ஒரு போஸ்ட் மாடர்னிஸ்ட்டா ?

சாரு: போஸ்ட் மாடர்னிஸ்ட் என்று தன்னை ஒருவர் பிரகடனப்படுத்திக் கொள்கிறார் என்றால் அதைப்பற்றி நான் கொஞ்சம் சந்தேகப்படுகிறேன். ஏனென்றால் இந்தப் பிரகடனங்கள் இலக்கியத்தை உருவாக்காது. கோஸின்ஸ்கி , இடாலோ கால்வினோ , உமபர்தோ எக்கோ போன்றவர்களெல்லாம் இலக்கியத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதில் உமபர்தோ எக்கோ ஒருவர்தான் தியரிடீஷ்யன். அவர்தான் போஸ்ட்மாடர்னிசம் பற்றிப் பேசுகிறாரே தவிர , மார்க்கேஸ் இருக்கிறாரே அவர் என்ன போஸ்ட் மாடர்னிஸ்ட்டா ? அதெல்லாம் கிடையாது. அவர் தன் போக்கில் இலக்கியத்தைப் படைத்துக் கொண்டிருக்கிறார். போஸ்ட் மாடர்னிஸம் என்பது விஷயங்களை இன்னும் தெளிவாக இன்னும் ஜனநாயக ரீதியாகப் புரிந்து கொள்வதற்கான ஒரு கருவி. அவ்வளவுதான். நீங்கள் மாஜிக்கல் ரியலிஸ்ட்டா என்று கேட்டால் மகாபாரதமே மாஜிக்கல் ரியலிஸம்தானே. அதிலும் போஸ்ட் மாடர்னிஸத்திற்கான கூறுகளை நாம் பார்க்கலாம். தெரிதாவின் பல கோட்பாடுகளை கிருஷ்ணனுடைய கதைகளோடு நாம் பொருத்திப் பார்க்க முடியும். போஸ்ட் மாடர்னிஸ்ட் , மாஜிக்கல் ரியலிஸ்ட் என்பதெல்லாம் எனக்குப் பொருந்தாது. நான் ஒரு படைப்பாளி அவ்வளவுதான்.

தீராநதி: பின் நவீனத்துவ கோட்பாடுகளை அறிமுகம் செய்வது , அது சம்பந்தமான பிரதிகளை உருவாக்குவது , இதையெல்லாம் நீங்கள் செய்யும்போது , ஏன் ஒரு போஸ்ட் மாடர்னிஸ்ட்டாக அடையாளப்படத் தயங்குகிறீர்கள் ?

சாரு: இங்கே போஸ்ட் மாடர்னிஸத்தை உள்வாங்கிக் கொண்டு எழுதியவர்களே ரொம்பவும் கம்மி. இதில் இன்னொரு பெரிய வேடிக்கை என்னவென்றால் இங்கு யார் முதலில் போஸ்ட் மாடர்னிஸ்ட்டாக எழுதினார்கள் என்று பார்த்தால் , தமிழவன் என்ற ஒருவர் எழுதிக் கொண்டிருந்தார். அவர் எழுதியதில் உயிரே கிடையாது. பிறகு எம்.ஜி.சுரேஷ் தன்னை ஒரு போஸ்ட் மாடர்னிஸ்ட்டாக பிரகடனப்படுத்திக் கொண்டு எழுதுகிறார்.

அவரை தமிழவனின் வாரிசு என்றுகூடச் சொல்லலாம். இப்படி உயிரில்லாத சவத்தை உருவாக்குவதால் அவரை வாரிசென்று சொல்கிறேன். முதலில் இலக்கியம் என்றால் அது போஸ்ட் மாடர்னிஸமோ அல்லது வேறு எந்த இஸமோ , அதில் உயிர் இருக்கவேண்டும். உயிர் இல்லாத ஒன்றை எழுத்தென்றே ஒத்துக்கொள்ளமுடியாது. வெறும் லேபிள் ஒட்டி விற்கப்படும் பொருட்களைப் போன்றதுதான் அது. இன்னும் சில பேர் இருக்கிறார்கள். அவர்களின் பெயரைச் சொல்வதற்கே பயமாக இருக்கிறது. அப்புறம் மூன்று தலை உருளும் என்பார்கள். இவர்கள் எல்லாம் உயிர் இல்லாத எழுத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அது அவர்களின் பிரச்சினை. நீட்ஷே , ஃபூக்கோ பற்றி எவ்வளவு காலமாக நிறப்பிரிகையில் , படிகளில் எம்.டி.எம் , தமிழவன் , ரவிக்குமார் , அ. மார்க்ஸ் , நான் எல்லோரும் சேர்ந்து விவாதித்தோம். அதைப்பற்றிய மொழி பெயர்ப்புகள் செய்தோம். இதெல்லாம் என்னுடைய ஃபிக்ஷன் மேக்கிங்கிற்கு எவ்வளவு தூரம் உதவும்… அதற்கு மட்டுமே இவை. இந்த உலகத்தை எவ்வாறு பார்ப்பது , என்னுடைய கான்செப்ட் , விஷன் இவற்றிக்கு இவை மாற்றுப் பார்வையை கொடுத்திருக்கின்றன. அவ்வளவுதான் இவற்றின் முக்கியத்துவம். நான் என்ன போஸ்ட் மாடர்னிஸத்தின் தியரிடீஷ்யனா ? இங்கே மொத்தம் படிப்பவர்களே ஆயிரம் பேர்தான். இங்கே அதற்கெல்லாம் ‘ ஸ்கோப் ’ பே கிடையாது. நான் போஸ்ட் மாடர்னிஸ்ட் என்று சொன்னால் ஓ.கே. இருக்கலாம். நான் அதற்கான லிட்ரேச்சரை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். எனக்கு முன்னால் நிறையப்பேர் இருக்கிறார்கள். அசோகமித்திரன் , எம்.வி.வெங்கட்ராமன் , கரிச்சான் குஞ்சு , கு.பா.ரா. , ப.சிங்காரம் இப்படி பலபேர்… கடல் மாதிரியான ஆட்கள் இருக்கிறார்கள். அசோகமித்திரனுக்கு போஸ்ட் மாடர்னிஸம் என்றால் என்னவென்று தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை. அவர் அதைப் பற்றி எங்கேயும் எந்தக் கருத்தும் சொன்னதில்லை.

இங்கே போஸ்ட் மாடர்னிஸ்ட் என்று தன்னைச் சொல்லிக் கொண்டு வருபவர்கள் முன்னவர்களைவிட ரொம்ப ரொம்ப ‘ வீக் ’ என்பதுகூட சரியாகாது ; செத்துப்போன ஒரு t மீஜ் t டை உருவாக்குகிறார்கள். இவர்கள் மீது எனக்கு மரியாதை கிடையாது. நான் போஸ்ட் மாடர்னிஸத்தை ஒரு t ஷீஷீறீஆக , இந்த உலகத்தைப் பார்க்கும் ஒரு அணுகுமுறையாக எடுத்துக்கொள்கிறேன்.

தீராநதி: ஒரு t ஷீஷீறீஆக போஸ்ட் மாடர்னிஸத்தைப் பயன்படுத்துகிறேன் என்று சொல்கிறீர்கள். ஆனால் சிலர் ‘ உங்களுக்கு போஸ்ட் மாடர்னிஸமே தெரியாது. சாரு படிக்காமல் உளறுகிறார் ’ என்று சொல்கிறார்களே ?

சாரு: நான் புத்தகங்களைப் படிப்பதில்லை என்று சொன்னால் பிறவி மேதை என்று ஆகிவிடும். போஸ்ட் மாடர்னிஸத்தைப் பற்றி ‘ மாத்ரு பூமி ’ யில் ஒரு தொடர் கட்டுரை கேட்டிருக்கிறார்கள். அந்தத் தொடர் கட்டுரை பின்னால் புத்தகமாக வெளிவரும். இந்த மாதிரியான புத்தகங்கள் எழுதுவது ரொம்பவும் சுலபம். பின் நவீனத்துவத்தைப் பற்றி ஒரு 400 பக்க புத்தகம் எழுதுவது _ இதைவிட சுலபமான வேலை வேறு எதுவும் கிடையாது.

ஆனால் , இந்த 400 பக்கத்திற்குப் பின் நவீனத்துவக் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு ஒரு நாவல் எழுதுவதற்கு உங்களின் வாழ்க்கையையே நீங்கள் விலையாகக் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுக்கப்பட்டதுதான் ‘ ராஸலீலா ’. சொரணையுள்ள ஒரு சமூகத்தில் எழுதி வெளி வந்திருந்தால் , என்னை உள்ளே தூக்கிப் போட்டிருப்பார்கள். அதன் வெளியீட்டாளர் மனுஷ்ய புத்திரனிடம் ‘ இது வெளிவந்தால் நீங்களும் , நானும் சேர்ந்து ஜெயிலுக்குப் போக வேண்டி வரும். தயாரா ?’ என்று கேட்டேன். அவரும் ‘ நான் தயார். ஆனால் , கக்கூஸ் போவது மட்டும்தான் பிரச்னையாக இருக்கும் ’ என்றார். அதற்குப் பிறகுதான் நான் அவரிடம் அந்த நாவலைக் கொடுத்தேன். இவ்வளவு சீரியஸாக இருக்கிறோம் நாங்கள். ஏன் தெரியுமா ? 400 பக்கத்தில் பின்நவீனத்துவம் பற்றி ஒரு தியரி புத்தகம் எழுதுவது சுலபம் என்றேன். நாங்கள் ஃபூக்கோவைப் பற்றி இருபது முப்பது வருடமாக இங்கே ஒர்க் பண்ணிக் கொண்டிருக்கிறோம். ராஸலீலாவில் தண்டனை என்ற ஒரு வார்த்தை வருகிறதென்றால் , உடனே ஃபூக்கோ தண்டனை பற்றி என்ன சொல்லி இருக்கிறார் என்று மேற்கோள் காட்டி எழுதி இருப்பேன். ‘ ஐ பியர் ’ என்பதுதான் ஃபூக்கோவின் முதல் புத்தகம். 100 வருடங்களுக்கு முன்னால் பியர் என்பவன் பத்துப் பதினைந்து கொலைகள் செய்திருப்பான். அவனுக்கு மரண தண்டனை விதிக்கும்போது ‘ ஐ பியர் ’ என்று ஆரம்பித்து நீதிமன்றத்தில் அவனுடைய வாக்குமூலத்தைச் சொல்கிறான். அது அப்படியே கருவூலத்தில் ஆவணமாக இருக்கிறது. அந்த ஆவணத்திற்கு ஃபூக்கோ எடுத்துப் போட்டு அறுபது , எழுபது பக்கத்திற்கு முன்னுரை கொடுத்தார். இதுதான் அவரின் முதல் புத்தகம். இப்படி 50 புத்தகம் , 100 புத்தகத்தைப் படித்துவிட்டு அப்படியே எடுத்து எடுத்து எடுத்து 400, 500 பக்கத்திற்கு பின் நவீனத்துவத்தைப் பற்றி ஒரு புத்தகம் எழுதுவது என்பது ரொம்பவும் சுலபம். அது ஒரு அகாடமி ஒர்க். ஆனால் , நான் ‘ ஐ பியரை ’ படித்துதான் , குற்றம் என்றால் என்ன ? ஒரு குற்றவாளியை எப்படி அணுகுவது ? சமூகத்தில் குற்றம் எப்படி ஏற்படுகிறது ? எப்படி தண்டனை என்பது உருவாகுகிறது ? என்பதையெல்லாம் புரிந்து கொண்டேன். நீங்கள் என்ன சொல்லுவீர்கள் மாதா , பிதா , குரு , தெய்வம் என்பீர்கள். மாதா , பிதா , என்பதையே தண்டனை சிஸ்டத்திற்குள் வைத்து ஃபூக்கோவைப் பார்க்கிறேன். ஏனென்றால் , மாதாதான் உங்களுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கிறாள். உதாரணத்துக்கு சாதி உணர்வை எடுத்துக் கொள்வோம். இதை உருவாக்குவது அன்னைதான். இதையெல்லாம் நான் தெரிந்து கொண்டது ‘ ஃபூக்கோ ’ வைப் படித்து. எங்களுக்கு எங்கள் அம்மா கொடுக்கின்ற தாய்ப் பாலோடு சாதிய உணர்வு என்பது கலந்து இருக்கிறது. இதைவிட்டு நீ வெளியே வரவேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுத்தவன் ‘ ஃபூக்கோ ’. நான் ஃபூக்கோவைப் படிக்கவில்லை என்று சொன்னால் , அப்போது என்ன அர்த்தம் ? நானே ஒரு ஃபூக்கோ. நன்றாகத்தான் இருக்கிறது.

தீராநதி: உங்களின் ‘ ராஸலீலா ’ நாவல் கோணல் பக்கத்தின் தொடர்ச்சியாகவே தென்படுகிறது. வழக்கமான நாவல் வடிவத் தன்மையில்லாமல் அது வெளியாகி இருக்கிறது. இந்தக் கருத்து சரியா ?

சாரு: இது ஒரு நல்ல அப்சர்வேஷன் என்றுதான் சொல்லவேண்டும். நான் ஒரு கட்டத்தில் மலையாளத்தில் மூன்று பத்திரிகைகளில் தொடர் எழுதிக் கொண்டிருந்தேன். ‘ மாத்ரு பூமி ’ யில் இசை குறித்தான கட்டுரை. ‘ ராஸலீலா ’ ‘ கலா கௌமுதியில் ’. ‘ மாத்யமம் ’ என்ற இதழில் பொதுவான விஷயங்களைப் பற்றியும் அரபி இலக்கியம் பற்றியும் எழுதினேன். அந்த நேரத்தில் ஒரு கட்டுரையை எழுதி இதை ‘ ராஸலீலா ’ வில் சேர்க்கலாமா ? இல்லை மியூசிக் கட்டுரையில் சேர்க்கலாமா ? என்பதை பிறகுதான் முடிவு செய்வேன். அப்போது அப்படி அப்படி இன்ன இன்னதில் தூக்கி கோர்ப்பேன். நான் எழுதுவதென்னவோ ஒரே விஷயம்தான். அதனால் இதில் ஒரு சௌகர்யம் கிடைத்தது.

மியூசிக் பற்றிய கட்டுரையில் பெரிய பிலாஸஃபர் ஒருவர் ‘ பீ ’’ யைப் பற்றியும் மூத்திரத்தைப் பற்றியும் ஆராய்ச்சி செய்திருப்பதைப் பற்றி எழுதி இருந்தேன். இது ஒரு சமூகவியல் ஆய்வுக் கட்டுரை. சென்ற மூன்று நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னால் , ஆங்கில இலக்கியத்தில் பலப்பல விஷயங்களை எடுத்துக்கொண்டு அந்த பிலாஸஃபர் ஆய்வை மேற்கொண்டிருக்கிறார்.

அந்தக் காலத்தில் ராணிகள் , அரசிளங்குமரிகள் எல்லாம் உப்பரிகையிலிருந்து நிலவைப் பார்த்து ரசித்ததைப்போல நிகழ்வுகள் வரும். விக்டோரியா காலத்தைச் சேர்ந்தவர்களின் உடைகளைப் பார்த்தால் கீழே அகண்டு இருக்கும். உள்ளாடை இறுக்கமாக ஓர் உறை போல இருக்கும். பெரிய பெரிய விருந்துகள் எல்லாம் நடக்கும் போது _ குறைந்தது ஒரு விருந்து நிகழ்ச்சி ஐந்து , ஆறு மணி நேரத்திற்கு மேலாக நடக்கும். அவர்கள் இயற்கை உபாதைகளை எப்படி எதிர்கொண்டிருப்பார்கள். அந்தப் பெரிய பெரிய உடைகளை கழற்றுவதற்கே குறைந்தது அரை மணி நேரம் பிடிக்கும். இது ஒரு பெரிய காரியம். உடனே ஆடைகளைக் களைந்துவிட்டு மலஜலம் கழிப்பதென்பது அந்த உடையில் சாத்தியமில்லை. அதனால்தான் அவர்கள் உப்பரிகையில் நின்று கொண்டு ஒன்றுக்கு அடித்திருக்கிறார்கள். நிலவையெல்லாம் ரசிக்கவில்லை என்று அவ்வாராய்ச்சியாளர் கண்டறிந்திருக்கிறார். இதை எப்படி அவர் கண்டுபிடித்தார் ? வெறும் ஊகத்தினால் அல்ல ; அந்தக் காலகட்டத்தில் வெளியான பத்திரிகை விளம்பரம் ஒன்றை வைத்து இதைக் கண்டுபிடித்து நிரூபித்திருக்கிறார். அந்தப் பத்திரிகை விளம்பரம் என்ன சொல்கிறதென்றால் , ஆடைக்குள்ளாகவே ஒரு டியூப்பை பொறுத்தி அதன் மூலம் நீங்கள் சிறுநீர் கழிக்கலாம் என்கிறது.

அந்த வசதிகளுடன் ஒரு புதிய ஸ்கர்ட் விற்பனைக்கு வந்திருக்கிறது என விளம்பரம் சொல்கிறது. உடனே அந்த ஆராய்ச்சியாளன் என்ன நினைக்கிறான் ? அப்படியானால் அதற்கு முன் என்ன செய்திருப்பார்கள் என்று யோசிக்கிறான். இப்படி விரியும் கட்டுரை அது. நான் இதைப் படிப்பதற்கு முன்னாலேயே இந்தியாவிலுள்ள முக்கால்வாசி அரண்மனைகளுக்கும் கோட்டைகளுக்கும் சென்று இருக்கிறேன். அங்கு பல் துலக்கும் இடம் , உப்பரிகை , நீச்சல் குளம் , குளியலறை எல்லாம் இருக்கும். ஆக்ரா கோட்டையில் மீன்காரன் ஒருவன் அரண்மனைக்குள்ளாகவே யமுனை நதியோடு மீன் கொண்டுவர ஒரு இடம் இருக்கிறது. ஓடிப்பிடித்து விளையாட , இசைக் கச்சேரிகள் நடத்த இப்படி பல இடங்கள் இருக்கிறது. ஆனால் , எங்கும் கக்கூஸ் மட்டும் இல்லை. அரண்மனைக்குள் எவ்வளவு பெரிய ஜனக்கூட்டம். அவர்கள் எப்படி கக்கூஸ் போய் இருப்பார்கள் என்பது எனக்கு ஆச்சர்யமாகவே இருக்கிறது. இப்படி நான் எழுதும் விஷயங்கள் எல்லாமே ஒன்றுதான். எழுதி முடித்த பிறகுதான் இதை நாவலில் சேர்க்கலாம் , இதை கட்டுரையாகக் கொடுத்துவிடலாம் என்று முடிவு செய்கிறேன்.

தீராநதி: போர்னோகிராஃபி வகையறா எழுத்துகளுக்கும் உங்களின் எழுத்திற்கும் என்ன வித்தியாசம் ?

சாரு: அது உங்களுக்கே தெரியுமே ?!

தீராநதி: வாசகனுக்கு விளக்கச் சொல்கிறேன்.

சாரு: ஃபோர்னோகிராஃபியில் இரண்டு வகைகள் இருக்கிறது. ஒன்று _ கமர்ஷியல் ஃபோர்னோ. அதைத்தான் இங்கு செக்ஸ் புத்தகங்கள் என்று சொல்லி போலீஸ் பறிமுதல் செய்து கொண்டிருக்கிறது. அதில் வெறும் வல்காரிட்டி மட்டுமே இருக்கும். எந்த ஃபோர்னோ கலாபூர்வமான அனுபவத்தைக் கொடுக்கிறதோ , அது கிரியேடிவ் ஃபோர்னோகிராஃபி. நான் எழுதுவது கிரியேடிவ் ஃபோர்னோ கிராஃபி கூட கிடையாது.

அலினா ரேயிஸ் என்று ஒரு பிரெஞ்ச் எழுத்தாளர் இருக்கிறார். கேத்தி ஆக்கரையும் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் கேத்தியின் ஃபோர்னோவில் ஆன்மீகமும் உண்டு. அதனால் கேத்தியை முழுக்க முழுக்க போர்னோ எழுத்தில் அடைக்க முடியாது ‘ புஸ்ஸி ’ என்று ஒரு நாவல் எழுதி இருக்கிறார் கேத்தி. அது போர்னோ வகையைச் சேர்ந்தது. அலினா ரேயிஸ் எழுத்து ஃபோர்னோ வகையைச் சார்ந்தது. இது எல்லாமே ஆர்ட்டிஸ்டிக் ஃபோர்னோவைச் சார்ந்தது. நான் எழுதுவது ஃபோர்னோ வகையையே சார்ந்தது. இல்லை என்று ஏன் சொல்கிறேன் என்றால் , என் 700 பக்க நாவலில் 50 பக்கம் மட்டுமே போர்னோ கிராஃபி இருக்கும். ஒரு 1000 சதுர அடி வீட்டில் 100 சதுர அடி அளவுக்கு பெட்ரூம் இருப்பதுபோல்தான் அது. சொல்லப்போனால் ஃபோர்னோவுக்குள் நான் இன்னும் போகவே இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

தீராநதி: ‘ செக்ஸைப் பற்றிய பொதுவான மதிப்பீடுகளைத் தாண்டி ஆழ்மன ஏக்கம் என்ற ஒன்றிற்குள் சென்று பிணாத்திக் கொண்டிருக்கிறார் சாரு. ’ _ இப்படி ஷோபாசக்தி ஒருமுறை குறிப்பிட்டார். இது ஆழ்மன நிம்மதியின்மையால் எழுகின்ற பிரச்னையா சாரு ?

சாரு: பெரிய செக்ஸ § வல் சர்வே ஒன்றை எடுத்தால்தான் இதற்கு பதில் தெரியும். அப்புறம் ஒருவனின் செக்ஸ் அனுபவம் என்பது இன்னொருவனுக்கு பொய்யாகவும் , புனைவாகவும்தான் தெரியும். தன்னுடைய செக்ஸ § வல் பார்ட்னர் , அதாவது மனைவியின் முழு நிர்வாணத்தைப் பார்த்த இந்தியர்களே இங்கு கம்மி. பெர்லினில் ஒரு இடம் இருக்கிறது. பத்து இருபது பெண்கள் எப்போதும் நிர்வாணமாக அங்கே இருப்பார்கள். அங்கு ஒரு நீச்சல் குளம். நீங்கள் விரும்பினால் அப்பெண்களுடன் குளத்தில் ஜலக்கிரீடை செய்யலாம். இதை நான் எழுதினால் ‘ இது மாதிரியெல்லாம் எங்கேயுமே இல்லை ’ என்பார்கள். அப்படிச் சொன்னால் ‘ போடா பொக்கா ’ என்று சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதான். என்னிடமே ஒருமுறை ஷோபா சக்தி நேரிலேயே சொன்னார். ‘ ஆணுக்கும் பெண்ணுக்குமான பாலியல் உறவு என்பது நீங்கள் சொல்வது போலெல்லாம் இருக்காது ’ என்றார்.

என் நண்பர் மனுஷ்ய புத்திரன் அடிக்கடி கூறுவார் ; ‘ எவனொருவன் ஒரு கலைப் படைப்பை அணுகும்போது அது உண்மையா , பொய்யா ?’ என்று கேள்வி கேட்கிறானோ அவனோடு எனக்கு எந்த சம்பாஷணையும் சாத்தியமில்லை ’ என்று. நான் ஒரு கலைஞன். நான் பொய்யை எழுதுவேன் ; உண்மையை எழுதுவேன். எதை வேண்டுமானாலும் எழுதுவேன். கலைஞன் என்பவன் உலக மக்களின் சுபிட்சத்திற்காக தன் சட்டைப் பையில் பல உண்மைகளை வைத்து விநியோகித்துக் கொண்டிருப்பவன் அல்ல , உண்மையைச் சொல்வது என் வேலை அல்ல. அதற்குப் பல தீர்க்கதரிசிகளும் உபதேசிகளும் இருக்கிறார்கள்.

மேலும் செக்ஸ் என்பது கடலைப் போன்றது. இந்தப் பூமியில் எத்தனை மனிதர்கள் உண்டோ அத்தனை விதமான செக்ஸ் இருக்கிறது. ‘‘ நான் எழுதுவது போன்ற செக்ஸ் இல்லை ; அது ஃபாண்டஸி ’’ என்று கூறுவது மிகவும் பத்தாம்பசலித்தனமானது. ஃப்ரான்ஸில் வசித்தாலும் பத்தாம் பசலிகளுக்கு விடிவே இல்லை என்பதையே ஷோபா சக்தியின் கூற்று நிரூபிக்கிறது. இதில் மற்றொரு சுவாரசியம் என்னவென்றால் , இந்தியாவில் தீவிர இடது சாரியாக உள்ளவரும் மதவாதிகளின் மொழியிலேயே பேசுவதும் சிந்திப்பதும்தான். ஷோபா சக்தியின் மேற்கண்ட கூற்று இங்கே இந்துத்துவவாதிகள் செக்ஸ் பற்றி கொண்டுள்ள அதே பழைய கருத்தையே பிரதிபலிக்கிறது.

சரி , ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். ஷோபா சக்தியின் ‘ ம் ’ நாவலில் ஒரு அப்பனுக்கும் மகளுக்கும் இடையிலான பாலுறவு மிக விஸ்தாரமாகக் கூறப்பட்டுள்ளது. பொதுவாக இம்மாதிரி incest உறவுகள் சரீர வேட்கையின் காரணமாகவே நடப்பவை. ஆனால் ‘ ம் ’ மில் அது ஒரு ‘ காதலாக ’ சொல்லப்படுகிறது. ஆக , உலகத்தில் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறதா ? இதன் மூலம் திருவாளர் ஷோபா சக்தி கூறும் ‘ உண்மை ’ என்ன ?

மேலும் ஒன்று , நான் ஒரு womanieser என்ற வகையில் எனக்கு பெண்களைப் பற்றியும் , காமத்தைப் பற்றியும் , போகத்தைப் பற்றியும் சற்றே அதிகம் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் ‘ உள்ளே ’ போகப் போகத்தான் ‘ கற்றது கைம்மண்ணளவு ; கல்லாதது உலகளவு ’ என்பது தெரிய வருகிறது. எனவே ஷோபா சக்தி போன்றவர்கள் இவ்விஷயத்தில் அடக்கம் காட்டுவது நல்லது.

தீராநதி: உங்களின் ‘ நேநோ ’ சிறுகதைத் தொகுதி தமிழ் நான் _ லீனியர் ரைட்டிங் ஸ்டைலுக்குக் கிடைத்த நல்ல தொகுதி. ஏன் நீங்கள் சிறுகதைப் பரப்பில் தொடர்ந்து இயங்கவில்லை ?

சாரு: அது ஒரு காலகட்டம். அவ்வளவுதான். ‘ நேநோ ’ வில் வராத சில கதைகள் என்னிடம் இருக்கிறது. ‘ கர்நாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும் ’ என்ற கதை ரொம்பவும் முக்கியமான சிறுகதை. இந்தக் கதையை வெளியிடுவதற்குக் கூட வழி கிடையாது. அது எந்தப் பத்திரிகையிலும் வெளிவரவேயில்லை. எனக்காக நாகார்ஜுனனே போய் டைப் பண்ணி , புத்தகமாகத்தான் வெளிவந்தது. அதேபோல் நாடகம்…

‘ ரெண்டாம் ஆட்டம் ’ என்று மதுரையில் ஒரு நாடகம் போட்டோம். நான்தான் அதை கன்சீவ் பண்ணேன். நம் நண்பர்கள் எல்லாம் நடித்தார்கள். நானும் நடித்தேன். எல்லோரையும் அடித்து தூக்கிப் போட்டு மிதித்தவர்கள் எல்லாம் பொதுமக்கள் கிடையாது. நாடகத்தில் பிஹெச்டி வாங்கியவர்கள் , சக நாடகக் கலைஞர்கள். சண்டையை விலக்கியவர் மு. ராமசாமி என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் , சண்டையை மிகத் தீவிரமாக மூட்டிவிட்டவர் அ. மங்கைதான். ‘ அடிங்கடா அவனை ’ என்ற வார்த்தைகள் இன்னமும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. இந்த நாடகம் சம்பந்தமாக நான் 500 பக்கம் உள்ள புத்தகத்தை அகஸ்தோ போவாலைப் பற்றி ‘ ஃபாரம் தியேட்டர் ’ என்று ‘ வெளி ’ பத்திரிகையில் மொழி பெயர்த்திருக்கிறேன். இப்படி அடித்தவுடன் அதற்குப் பிறகு நாடகத்தையே விட்டு விட்டோம்.

தொடர்ந்து நீங்கள் செயல் வீரனாக இருக்க வேண்டுமென்றால் அடிவாங்க வேண்டும். நீங்கள் பெரிய ‘ கொரில்லா ’ மாதிரி இருக்க வேண்டும். அந்த அளவுக்கெல்லாம் சமூகத்தில் நமக்கு இடமே கிடையாது.

தீராநதி: பொது மக்களைவிட எழுத்தாளனுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவர்கள் சக படைப்பாளிகளாக இருக்கிறார்கள் என்கிறீர்களா ?

சாரு: ஆமாம். நிச்சயமாக கோடிட்டு உறுதியாகச் சொல்கிறேன். பொதுமக்கள் எப்போதும் பாதுகாப்பான ஆட்கள். பொது மக்களிடம் சென்று நீங்கள் நாடகம் போடலாம். அவர்களிடம் நமக்கு எந்தப் பிரச்னையும் வராது. சக படைப்பாளிகள்தான் ஜனநாயக உணர்வே இல்லாத ஆட்களாக இருக்கிறார்கள். நம்முடைய காம்ரேட் என்று சொல்லிக்கொள்பவர்கள்தான் ஆபத்தானவர்கள்.

தீராநதி: ஜனநாயகத்தைக் கோரியும் , மனித உரிமைகளின் அடி ஆழம் வரை சென்றும் விவாதிக்கும் படைப்பாளிகள் பொதுமக்களைவிட வன்முறையாகச் செயல்படுகிறார்களே , ஏன் ?

சாரு: அது எனக்குத் தெரியவில்லை. யார் அதிகமாக ஜனநாயகத்தைப் பற்றி படிக்கிறானோ , அவனே பாசிஸ்ட்டாகி விடுகிறான். ‘ ஒருவிதமான ‘ ஐரனி ’ தான் இது. அல்லது விதி. கம்யூனிஸம் என்பது மிகப்பெரிய ஜனநாயகக் கோட்பாடு. எல்லா மனிதனும் சமமாக இருக்க வேண்டும் என்று சொல்லும் உயரிய சித்தாந்தம். ஆனால் அது எப்படி பாசிஸமாக மாறியது ? உதாரணம் ; மாவோ. இது ஏதோ கம்யூனிஸத்தில் மட்டும் நடக்கவில்லை. ஆன்மிகத்திலும் நடக்கிறது. ஆன்மிகவாதி என்ன சொல்கிறான். ‘ நான் சொல்வது மக்களுக்காக. நான் சொல்வது ரொம்ப ரொம்ப நிஜம் ’ என்று அவன் நினைப்பதனாலேயே அதை மற்றவர் மீது திணிக்கப் பார்க்கிறான். இப்படி அதீத ஜனநாயகம் பேசுபவன் சர்வாதிகாரியாகவும் , அதீத ஆன்மிகம் பேசுபவன் பாசிஸ்ட்டாகவும் ஆவதெல்லாம் இந்த உள் முரண்களால்தான். இதற்கு நேர்வாழ்க்கையில் உங்களுக்குத் தெரிந்த பல உதாரணங்களை என்னால் சொல்ல முடியும். ஆனால் , அது அநாவசியம் , வேண்டாம்.

தீராநதி: இளையராஜாவின் இசையை விமர்சித்து கோணல்பக்கத்தில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறீர்கள் ?’ உங்களின் இசை ரசனை பற்றி விளக்கமுடியுமா ?

சாரு: ‘ ஆல் இண்டியா ரேடியோவின் சங்கீத் ’ சம்மேளன் மூலமாக ரவிசங்கரின் இசைக் கச்சேரிகளைக் கேட்க ஆரம்பித்ததிலிருந்து என் இசைத் தேடல் தொடங்கிவிட்டது. அதற்கு முன்னாலேயே எங்கள் ஊர் பள்ளி வாசல்களில் கேட்கும் ‘ நகரா ’ இசை மூலம் என் இசை ரசனையைப் பெருக்கிக் கொண்டேன். இன்னும் சொல்லப்போனால் , இலக்கியத்தைவிட எனக்கு இசையின் மேலும் சினிமாவின் மேலும்தான் ஆர்வம் அதிகம். சினிமா சம்பந்தமாக நான் நிறைய எழுதி இருப்பதால் அச்சந்தேகம் யாருக்கும் எழவில்லை. இசை பற்றி நான் அதிகம் எழுதாதது கூட அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். 25 வருடங்களுக்கு முன்னால் ‘ மீட்சி ’ இதழில் ‘ சிலப்பதிகாரத்து இசை நுணுக்க விளக்கம் ’ என்ற எஸ்.ராமநாதன் எழுதிய புத்தகத்தை அடிப்படையாக வைத்து கர்நாடக இசைக்கும் , நாட்டுப்புற இசைக்கும் உள்ள இணைத்தன்மைகள் பற்றி ஒரு ஒப்பீட்டுக் கட்டுரை எழுதி இருக்கிறேன். ‘ ஷங்கர்லால் இசைவிழா ’ என்று கணையாழியில் ஒரு கதை எழுதி இருக்கிறேன். அதைப் பாராட்டி அப்போது அசோகமித்திரன் கூட ஒரு கடிதம் போட்டார். நான் டில்லியில் இருந்தபோது பல இசைக் கலைஞர்களின் கச்சேரியை நேரடியாகக் கேட்டிருக்கிறேன்.

தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு இசை என்றால் அவர்களின் வரம்பிற்குள் கர்நாடக இசையும் இந்துஸ்தானியும்தான் இருக்கிறது. இசை என்பது உலகம் பூராகவும் இருக்கின்ற ஒன்று. இவற்றையெல்லாம் இசையென்று நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். உங்களுடைய செவியும் அறிவும் உணர்வும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த ரசனை இல்லாதவர்களெல்லாம் இசை ரசனையே இல்லாதவர்கள் என்றுதான் சொல்வேன்.

இளையராஜாவை விட யுவன் ஷங்கர்ராஜா பல மடங்கு இசை ரசனையுள்ளவர். ‘ புதுப்பேட்டை ’ யில் அவர் கொடுத்திருக்கும் இசை பெரிய சிம்பொனி மாதிரி இருக்கிறது. மேற்கத்திய இசையில் ரொம்பவும் ஆழமான ரசனை உள்ளவனால் மட்டுமே இதைச் செய்ய முடியும். அதே போல ஏ.ஆர்.ரஹ்மான் ‘ குரு ’ படத்திற்குப் போட்டிருப்பதும் உயர்தரமான இசை என்று சொல்ல முடியும். நான் எழுதிய இசைக் கட்டுரைகள் ‘ கலகம் காதல் இசை ’ என்று தொகுக்கப்பட்டு சமீபத்தில் ஒரு புத்தகமாக வந்திருக்கிறது. இதுதான் எனக்கும் இசைக்கும் உள்ள உறவை வெளிப்படுத்தும் சான்று. இளையராஜா பற்றி இன்னும் சொல்ல வேண்டும் என்றால் அவருக்கும் மேலாகச் சென்று இசையில் சாதனை செய்தவர்கள் சுமாராக பதினைந்து பேரையும் மறந்துவிட்டு , மறுத்துவிட்டு இவர் இருப்பது நன்றி கெட்டதனம். ஒருவன் தன்னை இசைஞானி என்று கூப்பிட்டால் , எனக்கு முன்னால் பதினைந்து ஞானிகள் இருந்திருக்கிறார்கள் என்று தன்னடக்கத்துடன் அவர் சொல்லியிருக்க வேண்டும்.

இளையராஜா கொடுக்கின்ற பேட்டிகளில் எல்லாம் தனக்குத் தெரியாத விஷயங்களில் மூக்கை நுழைத்து உளறிக் கொண்டிருக்கிறார். அதனால்தான் நான் அவரை விமர்சிக்க வேண்டி இருக்கிறது. ‘ பாப் மார்லி ’ யை குப்பை என்கிறார். கத்தாரை குப்பை என்கிறார். ஆந்திராவில் சென்று கத்தாரை குப்பையென்று சொல்லிப் பாருங்கள். அப்புறம் என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.

தீராநதி: யுவன் ஷங்கர் ராஜாவின் இசை குறித்து பேசியதால் கேட்கிறேன். இளையராஜாவின் இசையைக் கேட்கும்போது அதில் ஒரு மன அமைதியின்மை நிலவுகிறது. அதே யுவன் ஷங்கர்ராஜாவின் இசையைக் கேட்டால் ஒரு விளிம்பு நிலை கலாச்சாரத் தன்மையுடன் கூடிய ஒரு கொண்டாட்டம் பீறிடுகிறது. இது சரியான ஒப்பீடா ?

சாரு: யுவனைப் பொறுத்த அளவில் நீங்கள் சொல்வதை நானும் உணர்ந்திருக்கிறேன். ஆனால் , இளையராஜாவின் இசையில் நீங்கள் சொல்வது போன்ற ஒரு குணாம்சம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதை நான் உணர்ந்திருந்தால் அவரைக் கொண்டாடி இருப்பேன். எனக்கு அவரிடம் அப்படி ஒரு குணாம்சமே இருப்பதாகத் தோன்றவில்லை. ஒருவேளை அதற்குக் காரணம் _ என் எரிச்சல் சார்ந்ததாகக்கூட இருக்கலாம். அவர் செய்கின்ற பல ‘ லந்து ’ களால் என் புலனுணர்வுக்கு அது எட்டாமலேகூட போய் இருக்கலாம். ஒருவேளை உங்களுடைய அனுமானம் சரியாக இருந்தால் , அதற்கு அவரின் ஆன்மிகத் தேடல் ஒரு காரணமாக இருக்கலாம். ஆன்மிகத் தேடல் இருந்தாலே அது ஒருவித அமைதியையும் , அமைதியின்மையையும் ஒருங்கே ஏற்படுத்திவிடும்.

தீராநதி: உங்களுடைய எழுத்துகளில் சொல்லத்தகுந்த அறமாய் ஒரு மெலிதான திராவிட அரசியல் தன்மை இழையிடுவதாகத் தெரிகிறது. அந்தக் குரல் ஒலித்துக் கொண்டேயும் இருக்கிறது. திராவிட அரசியலின் தொடர்ச்சியில் வரும் ஒரு எழுத்தாளனாக உங்களை நீங்கள் உணருகிறீர்களா ?

சாரு: இதற்கு முன்னால் அப்படி இருந்த ஒரு எழுத்தாளரை உங்களால் சொல்ல முடியுமா ?

தீராநதி: நிறைய இருக்கிறார்கள். குறிப்பாக பிரமிள் ?

சாரு: இவ்வளவு அப்ஜெக்டிவ்வாக நான் இதுவரை யோசித்ததில்லை. ஆனால் , எனக்கும் திராவிட அரசியலுக்குமான ஒரு தொடர்பு முப்பது வருடமாக இருந்து கொண்டேதான் இருக்கிறது. இல்லை என்றால் கருணாநிதிக்கு ஒரு கடிதம் என்னால் எழுதியிருக்க முடியாது. திராவிட இயக்கத்தின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் வைத்தே ஒரு நாவல் எழுதும் எண்ணம் எனக்கிருக்கிறது. அதை ஏன் யாரும் செய்யவில்லை என்பது மிகப்பெரிய கேள்வியாகவே இருக்கிறது. உலக அளவில் இப்படி எழுச்சியும் வீழ்ச்சியும் கொண்ட ஓர் இயக்கமாக சீலேவில் பெரோன் மூமெண்ட்டை மட்டுமே சொல்லலாம். அதற்கடுத்தது திராவிட இயக்கம்.

வேறு எங்கேயும் இப்படிப்பட்ட தீவிரமான ஒரு வளர்ச்சி குறிப்பிட்ட காலத்திற்குள்ளாகவே ஒரு வீழ்ச்சி இவ்வளவு டிராமாடிக்காக நடந்ததில்லை. சிவாஜி கணேசனும் கருணாநிதியும் ஒரே மேடையில் கட்டித் தழுவிக் கொண்ட காட்சியை உங்களால் மறக்கமுடியுமா ? எப்படிப்பட்ட நாடகத் தன்மை கொண்ட காட்சி அது! இவற்றையெல்லாம் தொடர்ந்து மனதில் நான் பதிவு செய்து கொண்டே இருக்கிறேன். நீங்கள் குறிப்பிடும் அத்தன்மை என்னிடமும் இருக்கத்தான் செய்யும்.

நன்றி – குமுதம் தீராநதி

பிரிவுகள்:Uncategorized
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக